Friday, September 14, 2018

சாரண இயக்கம் வரலாறு-1

சாரண இயக்கம்
சாரணியம் முதன் முதலில் 1907 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவர் தோற்றுவித்தார். இவரைச் சிறப்பாக "லார்டு பேடன் பவுல்' என்று அழைப்பர். இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதாகும் . மேலும், இது உற்று நோக்குதல், வேட்டையாடுதல் அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற திறமைகளையும் வளர்க்கிறது. சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற சாரண சாரணியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மாறாப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிற வர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும் எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவர். சாரணியம் மூன்று பிரிவுகளை உடையது. குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை மாணவர்களுக்கும் நீலப்பறவை, சாரணியர், திரி சாரணியர் என்ற மூன்று பிரிவுகள் மாணவியருக்கும் பொருத்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர்கள் எனவும், சாரணியர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் "கைடு கேப்டன்கள்' எனவும் அழைக்கப்படுகின்றனர். சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையானப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மாநில அளவில் சாதனை படைக்கும் சாரண, சாரணியர்களுக்கு ராஜ்ய புரஷ்கார் என்னும் மாநில விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் மாநில ஆளுநர் மாளிகையில் ஆளுநரால் நேரடியாக வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சாதனை படைக்கும் சாரண, சாரணியர்களுக்கு ராஷ்டிரபதி விருது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் /டிசம்பர் மாதங்களில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது. சாரண, சாரணியர்களின் பல்வேறு செயல் திட்டங்களை வெளிக்கொண்டு வரும் பொருட்டு மாவட்ட அளவில் பேரணிகளும், மாநில அளவில் கேம்புரிகளும், தேசிய அளவில் நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஜாம்புரிகளும் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு மாநில கலாசாரங்களும், நட்புறவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மேலும், கலாசாரங்களை வலியுறுத்தும் ஊர்வலங் களும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் தீக்களி ஆட்டங்களும் இதில் இடம் பெறுகின்றன. சாரண இயக்கத்தில் மாணவர்களைப் பள்ளி சூழலில் இருந்து விடுவித்து இயற்கைச் சூழலுக்கு அழைத்துச் சென்று அங்கு பயற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் உடற்பயிற்சிகள்,முதலுதவி பயிற்சிகள் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

சாரணத் தந்தை பேடன் பவுல் 1857ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ம் நாள் லண்டனில் பிறந்தார். 1876ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். ராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக 1907ம் ஆண்டு "பிரவுண்சீத்' தீவில் முதன் முதலில் 20 மாணவர்களைக் கொண்டு சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
இவ்வியக்கம் 1909 ம் ஆண்டில் இந்தியாவில் துவக்கப்பட்டது.இச்சீரிய இயக்கத்தைத் துவக்கி வளர்த்த பேடன் பவுலரது துணைவியார் திருமதி ஓலோவ் அம்மையாரின் பிறந்த நாளும் பிப்ரவரித் திங்கள் 22ம் நாளேயாகும். இவர்களின் பிறந்த நாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் உலக முழுவதும் நினைவு நாள் எனக் கொண்டாடுகிறோம். சாரண இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சாரணத் தந்தை 1941ம் ஆண்டு ஜனவரி திங்கள் 8 ஆம் நாள் காலமானார். இவருக்கு "உலக முதன்மைச் சாரணர்' என்ற விருதும் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களால், "கில்வெல் பிரபு' என்ற பட்டமும் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.